மதிகெட்டான் சோலை
An attempt at writing fiction in Tamil.
சென்னை என்னும் பாலைவனத்தில் பல நீர்க் குளங்கள் உண்டு. பரதேசியாக திரியும் நாடோடிகளுக்கு தங்களது அனுபவங்களையும், சித்தாந்தங்களையும் ஆழமாக சமுதாயத்தின் மனதில் பதிப்பதற்காகவே நிறுவப்பட்ட இந்த ஸ்தாபனங்கள், மக்களின் மயக்கத்தை ஊக்குவிக்கும் கோவில்கள். சாராயத்துடன் ஊறுகாவுக்கு பதிலாக கம்யுனிசத்தையும், காம்போதியையும் கலக்கி நக்கும் மனித இனத்தின் ஒன்றுபட்ட இரைச்சல், மரணப்படுக்கையில் கிடக்கும் மனிதநேயத்திற்கு பாடுகின்ற ஒரு அவசர ஒப்பாரி போல் இருந்தது. இதனாலோ என்னவோ, மைல்ஸ் டேவிசின் சாக்சபோன் அந்த அசிங்கமான சத்தத்தை மறைக்கமுடியாமல் மறைத்துக் கொண்டிருந்தது. சில நிதர்சனமான நிஜங்களை பல போதைகளை கொண்டு மூட வேண்டியிருக்கிறது.
ஒரு அழகான வாக்கியத்தின் நடுவில் வரும் சந்திப்பிழையைப்போல, அந்த இடத்தில் அவனது தோற்றம் ஒரு ஆச்சர்யக்குறி. பல எழுத்தாளர்களையும்; "இன்னும் பத்து மாதங்களில் உலகம் அழியப்போகின்றது!" என்று சந்தோஷமாக தத்தம் தீர்கதரிசனங்களை கூவும் மத குருக்களையும்; லியோ டால்ஸ்டாயையும், கார்ல் மார்க்சையும், அவர்களை கரைத்துக் குடித்த அரசியல் கிழவர்களையும் வியக்க வைக்கும் அளவுக்கு அடர்த்தியான தாடி. புவியீர்ப்பு ஏதோ அவனது மேல் இமையை மட்டும் அதிகமாக தாக்குகின்றது போலும் - அந்த கண்களின் சுவடு மட்டும்தான் ஏதோ ஒரு கோணத்தில் தெரிந்தது.
அவன் முன்னே ஒரு காலி கோப்பை. ஏற்கனவே "Repeat order sir?" என்று கேட்ட சர்வரை உட்காரவைத்து, அரை மணிநேரம் CERNல் நடக்கும் Big Bang சோதனையை Bing Bang என்று தப்பு தப்பாக உச்சரித்து, விவரித்து அனுப்பி விட்டான்.
"மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்!" என்று அவன் சொன்னது ஏதோ அந்த சர்வரின் பிறப்பையும் அவனது தாயையும் அசிங்கப்படுத்துவதுபோல் இருந்தது. "சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?"
இத்தனை நேரம் மலத்தின் நடுவில் இருந்தது தெரியாமல் திடீரென்று தன்னை சுற்றி இருக்கும் அசிங்கத்தை பார்த்தவன் போல் சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்தான்.
Sodium vapor lamp - கலாச்சாரப் பதுமைகளின் அணையா விளக்குகள். தெருவெல்லாம் மங்கியதோர் சாயம். பிணங்கள் சாலையோரத்தில் கிடந்திருந்தன. ரத்தமில்லாத மரணம் - ஞானத்தின் இறுதி உர்வலம். இவன் ஒருவன் மட்டும்தான் பைக்கில் சென்றபடி அஞ்சலி செலுத்தினான்.
வீட்டில் மயான அமைதி. ஏதோ ஒரு முணகல் சத்தம். மைல்ஸ் டேவிசின் சாக்சபோன் இசையை படு கேவலமாக வாயில் முணகிக்கொண்டு, அவனது தலையணையை ஆசையாக பற்றிக்கொண்டு, அந்த காலியான ஹாலில் இரண்டு மணிவரை ஆடிக்கொண்டிருந்தான்.